Breaking News

கல்லூரி மாணவி கொலை வழக்கு! கைதான இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை காவல்.

NEWS COVER
0
கல்லூரி மாணவி கொலை !வழக்கு கைதான இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.
GET NEWS COVER

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று மதியம் சத்யா என்ற கல்லூரி மாணவி சதீஷ் என்ற இளைஞரால் தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவை அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் என்ற இளைஞர் கடந்த சில நாட்களாக காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு வந்த மாணவி சத்யாவிடம் அங்கு வந்த இளைஞர் சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ் ரயில் வரும்போது நடைமேடையில் இருந்து அந்த மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். ரயில் அடிபட்ட மாணவி சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்து சதீஷ் தப்பி ஓடி விட்டார்.

 தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இளைஞர் சதீஷை தேடி வந்தனர். வழக்கு பதிவு செய்த போலீஸார் ஏழு தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய சதீஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை துரைப்பாக்கம் அருகே பதுங்கி இருந்த சதீஷை போலீசார் கைது செய்தனர்.

 இதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஷை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்பொழுது அங்கு கூடி இருந்த வழக்கறிஞர்கள் அந்த இளைஞர் சதீஷை உடனடியாக தூக்கிவிட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.  அப்போது சில வழக்கறிஞர்கள் இளைஞர் சதீஷை தாக்க முற்பட்டனர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சதீஷுக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சதீஷ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: முக்கிய செய்திகள்