பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள் மதிவதனியின் சகோதரி வீடியோ
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் மகள் துவாரகாவும் உயிருடன் உள்ளதாக மதிவதனியின் சகோதரி வெளியிட்டுள்ள வீடியோ திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த 2009ல் நடந்த இறுதி போரில் பிரபாகரன் அவரது மனைவி மகன் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
அதன்பின் அவர்களை பற்றிய எந்த தகவலும் வெளியாகாத நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த பிப்ரவரியில் உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கூறி இருந்தார் இந்த செய்தியை இலங்கை அரசு மறுத்தது.
இந்நிலையில் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என கூறிக் கொள்ளும் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்:-
பிரபாகரனின் மனைவியான என் தங்கை மதிவதனியும் அவரது மகள் துவாரகாவும் உயிரோடு இருப்பதை அண்மையில் அறிந்து கொண்டேன். பின் இருவரையும் நேரில் சந்தித்து உரையாடி அவர்களுடன் உணவருந்தி விட்டு வந்துள்ளேன்.
இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் என் உறவினர்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன். உண்மையில் இந்த செய்தியை கடவுள் கொடுத்த கொடையாகவே நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியையும் இலங்கை அரசு மறுத்துள்ளது.இது தொடர்பாக அந்நாட்டு ராணுவ அமைச்சக ஊடக தொடர்பாளர் நலின் ஹேரத் அளித்த பேட்டியில் ''பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிரோடு இருப்பதாக வெளியான செய்தி போலியானது. கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்று தவறான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்'' என கூறியுள்ளார்.